Categories: Ongoing Novel

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 15

(15)

நம் குடும்பம் தலைமுறை தலைமுறையாகவே மிகுந்த வசதியோடும் செல்வாக்கோடும் வாழ்ந்தவர்கள். கிட்டத்தட ஐம்பத்தேழு வருடங்களுக்கு முன்பு, அப்போது பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத காலமாக இருந்தாலும், எங்கள் கொள்ளுத்தாத்தா எங்கள் பாட்டி மீனாட்சி ஆசைப்படுகிறார்களே என்று சிலம்பம் கற்பதற்கு எங்கள் தாத்தாவிடம் அனுப்பிவைத்தார்கள். தாத்தா நற்குனசேகரம் பாட்டி அளவுக்கு வசதியானவர் அல்ல… ஆனாலும் அவருடைய கம்பீரமும் ஆளுமையும், வீரமும் சுலபமாகவே பாட்டியை அவர் பக்கம் விழவைத்தது. பாட்டிக்குத் தாத்தாமீது ஈடுபாடு இருப்பது தெரியாமலே, பாட்டியின் அப்பா நாகதேவன் என்று ஒருத்தரைப் பாட்டிக்கு மணமுடிக்கத் தீர்மானித்திருந்தார்கள்.

இந்த நிலையில் பாட்டியின் பதினாறாவது பிறந்த நாளை, பெரிதாகக் கொண்டாடிய எங்கள் கொள்ளுத்தாத்தா, தன்னுடைய திருமணப் பரிசாக நாகதேவனைப் பாட்டியின் முன்னால் நிறுத்தி, இவர்தான் உன் வருங்காலக் கணவர் என்று அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதிர்ந்த பாட்டி அத்தனை பேருக்கும் முன்பாகத் தைரியமாகத் தன் காதலை வெளிப்படுத்தி மணப்பதாக இருந்தால் நற்குணசேகரனை மட்டுமே மணப்பேன் என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார். இது நாகதேவனுக்குப் பெருத்த அவமானமாகப் போனது.

தாத்தாவும் தன் மூத்த மகளின் விருப்பத்தை மதித்து அந்தத் திருமணத்தைச் செய்துவைக்க, நாகதேவன் பெரும் ஆத்திரம் கொண்டான். அந்தக் காலத்தில் பெண் கொடுக்க மறுத்தால் அது பெரும் அவமானமாகக் கருதப்பட்டது. பெரும் ஆத்திரத்திலிருந்த நாகதேவன், எங்கள் தாத்தாவையும் பாட்டியையும் பழிவாங்கச் சந்தர்ப்பம் பார்த்திருந்தான்.

அப்போது பாட்டி எங்கள் அப்பாவைப் பிரசவிக்க இருந்த நேரம், பணம் கொடுத்து, பாட்டியைக் கொல்வதற்காக ஏதோ நஞ்சு கலந்த மருந்தைக் கொடுக்க எங்கள் பாட்டி கோமாவிற்குச் சென்றுவிட்டார்கள். செய்தியறிந்து தாத்தா, நாகதேவனைக் கொல்ல முயன்றபோது, இதனால் இரண்டு ஊர்களுக்கும் தீராத பகை உருவாகும் என்று கருதி எங்கள் கொள்ளுத்தாத்தா, எங்கள் தாத்தாவிடம் கெஞ்சி மன்றாடி அவரைச் சாந்தப்படுத்தி ஒரு போதும் நாகதேவன் குடும்பம்மீது கைவைக்கக் கூடாது என்று சத்தியம் வாங்கிவிட, தன் கோபத்தை அடக்கிக்கொண்டு தாத்தா வந்துவிட்டார். ஆனாலும் அந்தப் பகை நீறு பூத்த நெருப்பாக இரு குடும்பங்களுக்குள்ளும் இருந்துவந்தது என்பதுதான் உன்மை. அதற்குப் பிறகு பாட்டிக்கும் வேறு குழந்தைகள் பிறக்கவில்லை… அதன் பிறகு கொஞ்சக் காலம் சுமுகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

“எங்கள் அப்பா, அம்மாவை…” என்ற ஏகவாமன், தன் தாயை நினைத்ததும் கண்கள் கலங்க அதை வெளிக்காட்டப் பிடிக்காதவனாக விழிகளை இறுக மூடிச் சற்று நேரம் நின்றான். பின் மெதுவாகத் திறந்து,

“எங்கள் அம்மாவைக் கண்டு விரும்பித் திருமணம் முடித்தார். மறு வருடமே நான் பிறந்தேன். ஐந்து வருடங்கள் கழித்து…” என்றவன் மனம் கனக்கத் தன் தம்பியைப் பார்த்துவிட்டு, “இவன் பிறந்தான். அதற்கு இரண்டு வருடங்கள் கழித்து எங்கள் தங்கை சௌந்தர்யா பிறந்தாள்…” ஏகவாமனின் குரல் கமறியது.

நான்கு வருடங்களுக்கு முன்பு.

அந்தப் பிரமாண்டமான வீட்டிலிருந்து தூக்கியெறியப்பட்டு வெளியே வந்து விழுந்தான் அருள்தேவன். தொடர்ந்து இன்னும் நான்கைந்துபேர் சட்டை கிழிந்து இரத்தம் சிந்தச் சுருண்டு வந்து அருள்தேவனுக்குப் பக்கத்தில் விழ, அதைத் தொடர்ந்து பெரிய தட்டங்கள் சுழன்று வந்து விழுந்தவர்களின் மீதே கவிழ்ந்து விழ, அதன் பின்னால் பட்டுச் சேலை அணிந்த நான்கைந்து பெண்கள் அந்த வீட்டிலிருந்து அலறியவாறு வெளியே ஓடிவரத் தொடங்கினர்.

அதன் பின்னால் தினவெடுத்த தோள்களும் கம்பீரமும் பொங்க, சுருண்ட குழல் காற்றில் அசைய, நடக்கும்போது வேட்டி துள்ளி எழ, நரம்போடிய கரங்களால் முறுக்கிய மீசையை மேலும் முறுக்கிவிட்டவாறு பாயும் புலியென வெளியே வந்தான் கட்டுமான பொறியியல் முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்லக் காத்திருக்கும் இருபத்தைந்தே வயதான ஏகவாமன்.

வெளியே வந்தவனின் கர்ஜனைப் பார்வையைக் கண்டு அனைவரும் நடுங்கிப்போயிருக்க, வந்தவனோ அங்கிருந்தவர்களை எரிப்பது போலப் பார்த்துவிட்டுக் கீழே கிடந்த அருள்தேவனின் சட்டைக் காலரைப் பற்றித் தூக்கி அவன் முகத்திற்கு நேராகத் தன் முகத்தைக் கொண்டு சென்று,

“எத்தனை தைரியமிருந்தால் எங்கள் வீட்டுப் படியைத் தாண்டி எங்கள் வீட்டு இளவரசியைப் பெண் கேட்டு வந்திருப்பாய்…” என்று உறுமினான்.

அந்த அருள் தேவனோ உடல் நடுங்குமளவுக்குப் பயமிருந்தாலும், அதை வெளிக்காட்டாது தன் சட்டையைப் பற்றியிருந்த ஏகவாமனின் கரத்தைத் தட்டிவிட்டு,

“என்ன… வயதுக்கு வந்த பெண்ணிருந்தால் பெண் கேட்டு வருவது சகஜம்தானே மாப்பிள்ளை… இதற்குப் போய்க் கோவிக்கலாமா…?” என்று நக்கலாகக் கேட்க, ஆத்திரம் கொண்ட ஏகவாமன், தன் வலது கரத்தை முஷ்டியாக்கி அவன் முகத்தில் ஓங்கிக் குத்த வர,

“வாமன்… போதும்… நிறுத்து…” என்கிற கம்பீரமான அதட்டல் நிறைந்த குரல் பின்னால் இருந்து வரத் தன் முயற்சியை நிறுத்திவிட்டுச் சினம் தணியாமல் திரும்பிப் பார்த்தான் ஏகவாமன்.

அங்கே அவனுடைய தந்தை சேதுபதிசேகர் தோளிலிருந்த துண்டைக் கரத்தில் பற்றி உதறியவாறு இவனை நெருங்கி,

“வேண்டாம்… அவனை விட்டுவிடு… தேடி வந்தவர்களை இப்படி அவமதிக்கக் கூடாது… எங்கிருந்து கற்றாய் இந்தப் பாடத்தை…” என்று சினத்துடன் கேட்டவாறு ஆத்திரத்துடன் தன் மகனுக்குப் பின்னால் நின்றிருந்த அந்த வயோதிபரைப் பார்த்து முறைத்தார் சேதுபதி. அங்கே, ஏகவாமனின் தினாவெட்டுக்குச் சற்றும் குறையாத கம்பீரத்துடன் தன் பேரனைப் பெருமை பொங்கப் பார்த்துக்கொண்டிருந்தார் நற்குணசேகரம்.

அதைக் கண்டதும் மேலும் ஆத்திரம் கொப்பளிக்க,

“எல்லாம் உங்களால்தான் ஐயா… நீங்கள்தானே அவனுக்குப் புத்திமதி கூறவேண்டும்… அதை விட்டுவிட்டு ரசித்துக்கொண்டிருக்கிறீர்கள்… வர வர யாருக்கு யார் அப்பா என்றே தெரியமாட்டேன் என்கிறது… வயசுக்கு ஏற்றாட் போலவா நடக்கிறீர்கள்… பேரக் குழந்தைகளைக் கண்டு பூட்டக் குழந்தைகளைக் காணும் வயது வந்துவிட்டது… இன்னும் பொறுப்பு வரவில்லையென்றால் எப்படி” என்று தந்தை மீது பாய்ந்தவர், பின் தன் மகனைப் பார்த்தார். அவன் இன்னும் அந்த அருள்தேவனின் சட்டையைத்தான் பற்றியிருந்தான். அதைக் கண்டு மேலும் ஆத்திரம் கொண்டவராக,

“விடு… அவர்களை…” என்ற உரத்துச் சொல்ல இவனோ, தந்தையின் சொல்லைத் தட்டும் மகனாக இன்னும் எதிராளியின் சட்டையை இறுகப் பிடித்து நின்றான்.

தன் சொல்லை மகன் தட்டுகிறான் என்கிற கோபம் வேறு எரிகிறதீயில் எண்ணெய்யை ஊற்ற, தன் தந்தைக்குப் பின்னால் தலை குனிந்தவாறு நின்றிருந்த நாகதேவனையும், கருந்தேவனையும் எரிச்சலுடன் பார்த்தார்.

“எலே… உங்கள் மகனுக்குத்தான் புத்தியில்லை… உங்களுக்குமா புத்தியில்லை… அதுதான் எங்கள் இரு குடும்பத்திற்கும் ஆகாது என்று தெரியுமல்லவா… பின் எந்தத் தைரியத்தில் என் மகளைப் பெண் கேட்டு வந்தீர்கள்… உங்கள் மகனைப் பற்றி ஊர் உலகமே சிரிக்கிறது… ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு பெண்டாட்டி வைத்திருப்பவன் உங்கள் பிள்ளை… அது தெரியுமல்லவா… தெரிந்தும்… எங்கள் வீட்டுப் பெண்ணைக் கேட்டு வந்திருக்கிறீர்களே… என்ன குளிர் விட்டுப் போய்விட்டதா? ஏதோ நான் இருந்ததால் உங்கள் மகன் உயிரோடு தப்பினான்… இல்லையென்றால் என்னவாகியிருக்கும்…” என்று சீறியவர், இன்னும் அருள்தேவனின் சட்டையிலிருந்து கரத்தை எடுக்காது முறைத்துக் கொண்டிருந்த ஏகவாமனைப் பார்த்து,

“அதுதான் சொல்லிவிட்டேன் அல்லவா கரத்தை எடுக்கச் சொல்லி… சொல்லியும் கேட்கவில்லை என்றால் என் சொல்லிற்கு என்ன மரியாதை…” என்று கடுமையாகக் கேட்கப் படு ஆத்திரத்துடன் தன் கரத்தை விலக்கிக் கொண்ட ஏகவாமனின் மூச்சுக் காற்று, மூசும் காளையின் சீற்றத்துடன் வெளி வந்தது. எங்கே அவனருகே நின்றால் மீண்டும் தர்ம அடி விழுமோ என்று அஞ்சியவனாகக் கசங்கிய சட்டையை இழுத்துச் சரியாக்கித் தன் தந்தை, பாட்டனோடு இணைந்து கொண்டான் அருள்தேவன்.

கருந்தேவனின் முகமும், நாகதேவனின் முகமும் கிடைத்த வரவேற்பிலும், அவர்கள் நடந்துகொண்ட முறையிலும் பெரும் அவமானத்தில் கண்டிச் சிவந்து போக, தம்மை வேடிக்கை பார்த்த ஊர் மக்களை வெறித்துப் பார்த்தனர்.

கருந்தேவனுக்கு மனோகரி, சுந்தரி என்று இரு பெண்களுக்குப் பிறகு ஆண் வாரிசாக வந்து பிறந்தவன்தான் அருள்தேவன். அவனுக்குப் பிறகு வீரதேவன், என்று இன்னொரு மகன் பிறந்தாலும், முதல் ஆண் வாரிசான அருள்தேவன் மீது நாகதேவனுக்கும் கருந்தேவனுக்கும் உயிர். அதனால் அவன் இட்டதே சட்டமாகிப்போனது. அவன் கேட்பது ஒவ்வாத செயலாக இருந்தாலும், உடனே அது நிறைவேற்றப் பட்டது. அதனால் அருள்தேவன் முடிந்த அளவு கெட்டே போனான். பாட்டன், தந்தை போலத் தன் மகன் இருக்கக் கூடாது என்கிற எண்ணத்தில்தான் அவனுக்குத் தாய் அருள்தேவன் என்று பெயர் வைத்தார்… ஆனால் அந்தப் பெயருக்கும் அவனுக்கும் உள்ள ஒற்றுமை காத தூரத்திற்கும் அதிகம்.

சொல்லப்போனால் கலியுகத்து ஹம்சனானான் அருள்தேவன். அவனிடம் இல்லாத கெட்டப்பழக்கமும் இல்லை, உள்ள நல்லபழக்கமும் துளியுமில்லை… ஊரே வந்து அவனைப் பற்றிக் குறை சொன்னபோது,

“ஆண் பிள்ளை அப்படியிப்படித்தான் இருப்பான்… இது என்ன புதுமை? அந்தக் காலத்தில் எங்கள் தாத்தா பாட்டா செய்யாததா…” என்று மார்தட்டிக் கொள்ளும் கருந்தேவனின் அலட்சியப் போக்கு, அருள்தேவனின் ஊதாரித்தனத்தைப் பெரிதும் ஊக்குவித்தது என்றே சொல்லவேண்டும்.

இந்த நிலையில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சௌந்தர்யாவை அருள்தேவன் கண்டுவிட, எந்தப் பெண்ணிடமும் இல்லாத அழகும் அமைதியும் பெண்மையும் அவளிடமிருப்பதைக் கண்டு, அவசரமாகத் தொபுக்கடிர் என்று காதலில் விழுந்துவிட, உடனே தன் பழைய பகையை மறந்து கருந்தேவனும், நாகதேவனும் பெண் கேட்டுக் கிளம்பிவிட்டனர்.

அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. சேதுபதியின் குழந்தைகளுக்குக் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் தன் மகனுக்குக் கிடைக்கவில்லை என்று கொந்தளித்த கருந்தேவனுக்குத் தன் மகன் சௌந்தர்யாவை விரும்புவது தெரிந்ததும் மட்டற்ற மகிழ்ச்சிதான். இருக்காதா, அந்தக் குடும்பத்திற்குள் தன் மகன் போனால், மதிப்பும் மரியாதையும் தானாக வந்துவிடும் என்று நம்பினார். அதனாலேயே எந்த மறுப்பும் சொல்லாமல் கிளம்பிவிட்டிருந்தார். ஆனால் பாவம், போன வேகத்திலேயே திரும்பி வருவோம் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.

அதுவும், தன் பாட்டிக்கு நடந்த அநீதியைப் பேச்சுவாக்கில் கேள்விப்பட்ட ஏகவாமனுக்கும் ஏற்கனவே அந்தக் குடும்பத்தின் மீது கட்டுக்கடங்காத கோபம் இருந்தது. எப்போதான்டா, தன் கோபத்தைக் காட்டலாம் என்று காத்திருந்தவனுக்கு, பழம் தானாக நழுவித் பாலில் விழுந்துவிட, கேட்கவேண்டுமா. அத்தனை வருடக் கோபத்தையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஒரு காட்டு காட்டிவிட்டான்.

ஏகவாமன், இப்படி ஊர் மக்கள் பார்க்கத் தம்மை அவமானப் படுத்துவான் என்று கனவா கண்டார்கள். தலை குனிந்து நின்றிருந்தவர்களைக் கம்பீரமாக நெருங்கிய நற்குணசேகரம், தன் பேரனைப் பெருமையோடு பார்த்து அவன் தோளின் மீது கரத்தைப் போட்டுத் தன்னோடு அணைத்தவர்,

“நீ என் பேரண்டா… என்னுடைய இரத்தம்… உன்னை எண்ணிப் பெருமைப் படுகிறேன்டா ராஜா…” என்றவர் அங்கே நின்றிருந்த நாகதேவனை அலட்சியமாகப் பார்த்து,

“உன்னை எப்போதோ கொன்றிருப்பேன்… என் மாமாவிற்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக அடங்கி இருக்கிறேன்… அன்று என் மனைவிக்கு மட்டுமல்ல எனக்கும் இறப்பு என்றால் என்னவென்று காட்டிய நாள் அல்லவா அது… மறக்கமாட்டேன்…” என்றவர் தன் பேரனை மேலும் தன்னோடு இறுக்கி,

“இவன் என் பேரன்… எனக்குத் தெரிந்த அத்தனை யுத்தக்கலைகளையும் ஒன்றுவிடாமல் கற்பித்திருக்கிறேன்… முடிந்தால் ஒண்டிக்கொண்டி மோதிப்பார்க்கலாமா?” என்று நெஞ்சை நிமிர்த்திக் கேட்க,

“அப்பா…” என்று கத்தினார் சேதுபாதி.

“இவன் ஒருத்தன்… எனக்கென்று வந்து பிறந்திருக்கிறான் பார்… இவனைச் சொல்லிக் குற்றமில்லை… என் மாமனைச் சொல்லவேண்டும்… பிறந்ததுதான் பிறந்தான்… என் பெண்டாட்டியைக் கொண்டு பிறந்திருக்கலாம்… அதை விட்டுவிட்டு அப்படியே அவள் அப்பனைப் போல, சண்டை என்றால் எட்டுக்கட்டைக்கு அப்பால் தள்ளி நிற்கிற சோம்பேறியாகப் பிறந்திருக்கிறான்… சே… மடப்பயல் மடப்பயல்…” என்று வாய்க்குள் முணுமுணுக்க, அதைக் கேட்ட ஏகவாமன் மெல்லியதாகச் சிரித்தான்.

“அங்கே என்ன சத்தம்…” என்று கோபத்துடன் சேதுபதி கேட்க,

“ம்… சுரைக்காய்க்கு உப்பில்லை என்றேன்… வாங்கித்தருகிறாயா?” என்று எரிச்சலுடன் கேட்டவர், அங்கே தன் பேரன் நின்றால் அவனுக்கும் மண்டகப்படி விழும் என்று புரிந்தவராக,

“நீ வாடாப் பேராண்டி… நாம் விட்ட வாள் பயிற்சியை முடிப்போம் என்று கையைப் பற்றி இழுத்துச் செல்ல, இவனோ கொதிப்பு அடங்காதவனாகத் தன் சுட்டுவிரலை உயர்த்தி நாக்கைக் கடித்து அருள்தேவனைப் பார்த்து, பத்திரம் என்பது போல அசைத்தவாறு செல்ல, அருள்தேவன் ஏகவாமனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவர்கள் விலகியதும், அங்கு நின்றிருந்தவர்களை ஏறிட்ட சேதுபதிசேகர்,

“எங்கள் பெண்ணிற்கு நல்ல ஒரு இடத்தில் சம்பந்தம் பார்த்திருக்கிறோம்… தயவு செய்து இங்கே நடந்ததைப் பெரிதாக்காமல் கிளம்பிச் செல்லுங்கள்…” என்று அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வர, அங்கே அவர் மனைவி கமலாதேவியும், தாய் மீனாட்சியும் எதையோ இரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அதைக் கண்டு மேலும் கோபமுற்ற சேதுபதி,

“ஏன் அம்மா… நீங்களாவது நல்லது கெட்டது சொல்லி வாமனை வளர்க்கக் கூடாதா… ஜெயவாமனும் எனக்குத்தானே பிறந்தான்… அவன் அமைதியாக இல்லையா… இவனுக்கு என்ன அப்படி அடக்க முடியாத கோபம்… வீட்டிற்கு வந்தவர்களை இப்படித்தான் கண் மண் தெரியாமல் அடிப்பது? பெண்பிள்ளைகள் இருந்தால் இப்படிப் பெண்கேட்டு வரத்தான் செய்வார்கள்… அதற்காக? சே… ஏதோ இன்று நான் இருந்ததால் தப்பித்தது… இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும்?” என்று வருத்தத்துடன் கேட்க, எப்போதும் தன் கணவனுக்கு எதிர்த்துப் பேசாத கமலாதேவி தலையைக் குனிய, தன் மருமகளை முறைத்த லட்சுமி பாட்டி,

“அட நிறுத்து… என் பேரன் செய்ததில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கிறேன் நான்… இந்த வீட்டில் பெண் எடுப்பதற்கு ஒரு தகுதி வேண்டாமா? அவனுக்கு ஊர் முழுவதும் பெண்டாட்டி இருக்கிறது… அவனுக்கு எங்கள் வீட்டு இளவரசியைக் கேட்கிறதோ… எத்தனை தைரியம் இந்த வீட்டை மிதிக்க… அவனுக்கு இது போதாது… இன்னும் சாத்தியிருக்கவேண்டும்… யார் என்ன சொன்னாலும்… என் பேரன் செய்ததுதான் சரி சேது…” என்று பாட்டி தன் பேரனுக்காக வக்காலத்து வாங்கிக்கொண்டு வர, தன் தாயை எரிச்சலுடன் பார்த்தார் சேதுபதி.

“அம்மா… புரிந்துதான் பேசுகிறீர்களா இல்லை புரியாமல் பேசுகிறீர்களா? தாத்தா அப்பாவிடம் அந்தக் குடும்பத்தின் மீது கை வைக்கக் கூடாது என்று எதற்குச் சத்தியம் வாங்கினார்… இந்த ஊரின் ஒற்றுமைக்காகத்தான்… அது புரியாமல்… நாளைக்கு ஊர் பிரச்சனையாக வந்தால், யார் தீர்த்து வைப்பார்கள்… அதை யோசிக்காமல் பேசுகிறீர்களே…” என்று மேலும் சினக்க,

“தே… நிறுத்து… ஆமாம் இவர் பெரிய புத்தர், யேசு பிரான்… சமாதான உடன்படிக்கை நிகழ்த்த… போவியா…” என்று நொடிந்த லட்சுமி பாட்டி, திரும்பித் தன் மருமகளைப் பார்த்து,

“இத்தனை நேரமும் உன் மகன் செய்ததுதான் சரி என்று என்னோடு பேசிக்கொண்டிருக்கிறாயே… இப்போது என்ன வாயை மூடிட்டு இருக்கிறவ… புருஷனுக்குப் பயமாக்கும்… பயந்துதான் மூன்று பிள்ளைகளைப் பெற்றியாக்கும்…” கோபத்துடன் கேட்க, அதைக் கேட்டு அந்த வயதிலும் முகம் சிவந்து நின்ற தன் மருமகளைக் கண்டு, “நடிக்காதடி… கூறு கெட்டவளே… என் பேரனைத் திட்டிக்கொண்டிருக்கிறான்… பதிலடி கொடுக்காமல் என்ன அமைதி வேண்டிக் கெடக்கு…” என்றுவிட்டுத், திரும்பித் தன் மகனைப் பார்த்து முறைத்து,

“வந்தவர்களை அடித்து விரட்டிய என் பேரன் களைத்துப்போயிருப்பான்… அவனுக்கு முட்டை அடித்துக் கொடுக்கவேண்டும்… இல்லையென்றால் குழந்தை இளைத்துவிடுவான்…” என்றுவிட்டுச் சமையலறை நோக்கிச் செல்லத் தன்னை மறந்து நெற்றியில் அடித்துக்கொண்டார் சேதுபதி.

“என் கிரகம்… எனக்கும் வந்து வாய்த்திருக்கிறார்கள்…” என்று முணுமுணுக்க, மெல்லிய புன்னகையுடன் தன் கணவனை நெருங்கிய கமலாதேவி,

“அதுதான் நடந்து முடிந்து விட்டதல்லவா… இனி அதைப் பற்றிப் பேசி என்ன பயன்… விட்டுவிடலாமே… என்னவென்றாலும்… நம் மகன் செய்ததும் நியாயம்தானே… இனி மறந்தும் எங்கள் வீட்டு வாசலை மிதிக்கமாட்டார்கள் அல்லவா…” என்று கூற,

“ப்ச்… புரியாமல் பேசாதே கமலா… என் கவலை அது அல்ல… நாகதேவனும் கருந்தேவனும் பெயரைப் போலவே நச்சுப் பாம்புகள்… விஷத்தைக் கக்காமல் விடமாட்டார்கள்… இத்தனை காலமும் நான் அடங்கிப் போவதற்குக் காரணம் பயம் என்று நினைத்தாயா… இல்லைடி… நம்மால் நம் ஊர் மக்களுக்கு எந்தத் துன்பமும் வரக் கூடாது என்கிற எண்ணம்தான்… நாம் சண்டைக்குப் போனால் அவர்கள் கைக்கட்டி நிற்பார்கள் என்று நினைத்தாயா? எங்களுக்கு முன்பாக அருவாள் கம்போடு நிற்பார்கள்… நமக்காக எத்தனை குடும்பங்கள் சிதையும்… இது தேவையா… அது புரியாமல் நீ வேறு…” என்று எரிச்சலுடன் கூறும் போதே, வியர்வை வழிய, வெற்று உடம்புடன், வேட்டியைச் சண்டிக்கட்டாக மடித்தவாறு வந்துகொண்டிருந்தான் ஏகவாமன்.

தன் மகனின் தினவெடுத்த உடலையும் வேண்டிய இடத்தில் உருண்டு திரண்டிருந்த தசைகளையும், அதை மேலும் தெளிவாக எடுத்துக் காட்டுவது போல வியர்வையில் மின்ன, கர்ஜிக்கும் சிங்கமென வந்துகொண்டிருந்தவனைக் கண்டதும், ஒரு தந்தையாக அவரையும் அறியாமல் நெஞ்சம் விம்ம, அந்தப் பெருமையில் தன் மீசையை முறுக்கிவிட்டவராக,

“என்ன… பயிற்சி முடிந்ததா…” என்று கேட்டார்.

“யெஸ்பா…” என்றவாறு தந்தையை நெருங்கியவன், அவர் தோளிலிருந்த அங்கவஸ்திரத்தை இழுத்து எடுத்து, வியர்வையால் குளித்த தன் உடலைத் துடைக்க,

“டேய்… இப்போதுதான்டா ஒரு வேலையாக வெளியே போகக் கிளம்பினேன்… அதற்கிடையில் அங்கவஸ்திரத்தை அழுக்காக்கிவிட்டாயே…” என்று கோபித்துக்கொண்டிருக்கும் போதே, அவருடைய மனைவி இன்னொரு புதிய அங்கவஸ்திரத்துடன் கணவனை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

“அவனவன் தாயுடைய முந்தானையில் வியர்வையைத் துடைப்பான்… இவன்… எப்பப் பாரு… அங்கவஸ்திரத்தைப் பாழாக்கிக்கொண்டு…” என்றவாறு மனைவி கொடுத்ததை உதறித் தன் தோளில் போட்டுக் கொண்டு திரும்பினாலும் தந்தையாய் அவர் முகம் பெருமையில் பூரிக்க, அவரையும் மீறி உதடுகளில் துடித்த மெல்லிய புன்னகையுடன், நெஞ்சமும் நிமிர, மீசையை முறுக்கியவாறு தான் செய்யவேண்டிய கரியத்திற்காக வெளியேறினார் சேதுபதி.

அதே நேரம், தன் மகனின் அருகே நின்றிருந்த கமலாதேவி, திரண்ட அவன் புஜத்தில் ஒரு போடு போட்டு,

“டேய்… எத்தனை தரம் சொல்லியிருக்கிறேன்… அப்பாவின் அங்கவஸ்திரத்தை அழுக்காக்காதே என்று… நல்ல காரியமாக நான்கு இடத்திற்குப் போய் வரும் மனுஷன்… யோசிக்க வேண்டாமா…” என்று கோபமாகத் திட்ட, தன் தாயின் முந்தானையை எடுத்து மிச்ச வியர்வையைத் துடைத்தவாறு,

“ப்ச்… அப்பாவுடைய அங்கவஸ்திரத்தால் துடைக்கும்போது எழும் கெத்தே தனிமா… உங்களுக்கு அது புரியாது…” என்றவன், ஈரத்தால் நனைந்திருந்த முடியை வாரிவிட்டவாறு,

“இதற்கெல்லாம் அப்பா கோபிப்பார் என்று நினைக்கிறீர்களா… அதுதான் இல்லை… உங்களுடைய சேலையில் வியர்வை துடைக்கும்போது எப்படி மகிழ்வீர்களோ, அதே போல, அப்பாவும் என் மகன் என்கிற பூரிப்புடன் சென்றிருப்பார்… வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்” என்று விட்டு மடித்துக் கட்டிய வேட்டியை இழுத்துச் சரியாக்கியவாறு தன் அறை நோக்கிச் செல்ல முயன்றவனின் பார்வையில் சமையலறையில், மீனாட்சிப் பாட்டி பெரிய ஜாரில் முட்டைக் கோப்பியை ஊற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது. அதைக் கண்டதும், அவனுடைய வயிற்றைக் கலக்கியது.

சும்மா இல்லை… பத்து ஊர் முட்டைகளை நுரை பொங்க அடித்து, கோப்பியுடன் கலந்து, சுடச் சுடப் பால்விட்டுத் தயாரிக்கும் பாணம். ஒரு குவலையே தாராளமாகப் போதும்… ஆனால் இது… இரண்டு லீட்டருக்கும் குறையாத அளவு பாணம்… அவன் ஒருவன் மட்டுமே குடிக்க வேண்டும்… இதைக் குடித்தால் அவனுடைய நிலை என்ன? கூடவே குடிக்காமல் அங்கிருந்த நகரவும் முடியாதே… இப்போது இதிலிருந்து எப்படித் தப்புவது? அதிர்ந்தவன், தன்னையும் மறந்து,

“தாத்தா….” என்று கத்த, மின்னலாய் அவனருகே வந்து நின்றார் நற்குணசேகரம்.

“டேய்… பேராண்டி… எதுக்கடா கத்தினாய்?” என்று அவர் கேட்க, தன் விழிகளால் சமையலறையில் நின்றிருந்த பாட்டியைக் காட்டி,

“இதற்குத்தான் தாத்தா…” என்றான் நடுக்கத்துடன். திரும்பிப் பார்த்தவர், அங்கே குதூகலத்துடன் தன் பேரனுக்கு முட்டைக் கோப்பி வார்க்கும் மனைவியைக் கண்டதும், அன்று ஏகவாமனுக்கு முட்டைக்கோப்பிதான் உணவு என்று நன்றாகப் புரிந்து போகப் பரிதாபப் பட்டவராக,

“ஜெயன்…” என்று கத்தினார்.

பல்கலைக் கழகத்தில் மருத்துவம் இரண்டாம் ஆண்டில் கால் பதித்துக்கொண்டிருந்த ஜெயவாமன், அப்போதுதான் ஏதோ பரீட்சைக்காகப் படித்துக்கொண்டிருந்தான். தன் தாத்தாவின் அழைப்பிற்கு மறு கணம் அருகே வந்து நின்று

“என்ன தாத்தா?” என்றான்.

ஜெயவாமன், அண்ணனைப் போல உயரமானவன் அல்ல என்றாலும், பேரழகனே. தந்தையைக் கொண்டு பிறந்தாலும், அன்னையின் சாந்தமும் அமைதியும் அவனிடத்தே சற்றுத் தூக்கலாக இருக்கும். ஏகவாமன் அப்படியே தாத்தாவைப் போல. அதே கம்பீரம், அதே தெனாவெட்டு… அதே ஆளுமை… என்ன இவன் சற்று முன் கோபி… அவர் சற்று நிதானிப்பார்.

தன்னை நோக்கி வந்த இளைய பேரனிடம்,

“சின்னப் பேராண்டி… கூட்டு முயற்சிக்குத் தயாரா?” என்று கேட்க,

“ஏன்… என்னாச்சு…?” என்று புரியாமல் கேட்டவனிடம், எதுவும் கூறாமல் சமையலறைப் பக்கம் விழிகளால் காட்டத் திரும்பிப் பார்த்தான். உடனே நடக்க இருக்கும் விபரீதம் புரிந்துகொண்டவனாக,

“சௌந்தர்யா…” என்று கத்தினான். அவளும் எதோ முக்கிய வேலையாக இருந்தாள் போலும். தாவணி பறக்க, பதறி அடித்துக்கொண்டு கீழே இறங்கி வந்தவள், அங்கே திருத் திரு என்று விழித்துக்கொண்டிருந்த ஆண்களைக் கண்டு உடனே நிலவரத்தைப் புரிந்து கொண்டவளாக, உள்ளே ஓடிச் சென்றாள்.

திரும்பி வரும்போது அவளுடைய கரங்களில் மூன்று குவலைகள் வீற்றிருக்க, பாட்டி முன்னறைக்கு வருவதற்கு முன்பாகவே ஏகவாமன் தவிர மற்றைய மூவரும் புயலென ஓடிக் குறிப்பிட்ட ஜன்னலுக்கு வெளியே பதுங்கி நின்று கொண்டனர்.

அதே நேரம் முட்டைக் கோப்பியுடன் வெளியே வந்த மீனாட்சிப் பாட்டி,

“பாவம் என் பேரன்… இன்னும் கொஞ்ச நாட்களில் வெளிநாடு வேறு போகப் போகிறான்… இப்படி நேரத்திற்கு நேரம் யார்தான் அவனுக்கு முட்டைக் கோப்பி வார்த்துக் கொடுப்பார்களோ…” என்று புலம்பியவாறு வந்தவர், அங்கே நின்றவாறு தன் சிரிப்பை அடக்கப் பாடாய்ப் பட்டுக்கொண்டிருந்த மருமகளைக் கண்டு,

“எவ அவ… உன் புருஷனுக்குச் சாப்பாடு கட்டவேண்டும் என்கிற அக்கறை இருக்கா… போ… போய் அவனுக்குச் சாப்பாட்டைக் கட்டு… நான் என் பேரனுக்கு இதைக் கொடுக்கிறேன்…” என்று கறாராகக் கூறிவிட்டுப் பேரனை நோக்கி வந்தார்.

அப்போது ஒரு வேலையாள் தூசி தட்டிக்கொண்டிருக்க,

“த… தூசி தட்டியது போதும்… வெளியே போ…” என்ற விரட்டிவிட்டு, தன் பேரன் குடிப்பதைப் பார்த்துக் கண் வைக்க யாரும் இல்லை என்று உறுதிப்படுத்திய பின்பு,

“இந்தாயா… குடி…” என்று அவனிடம் அந்த ஜக்கை… இல்லை இல்லை கிடாரத்தை நீட்டினார்.

“பாட்டி… முழுவதையும் நானா குடிக்கவேண்டும்…” என்று பரிதாபமாகக் கேட்க,

“பின்னே… உன் தாத்தனா குடிப்பார்… ஏற்கனவே அந்த மனுஷன் கொழுப்பெடுத்து திரிவது போதாதா… நீ குடி கண்ணு” என்றதும்,

‘ஐயோ… அந்த நேரம் இது நினைவுக்கு வராமல் போச்சே… வந்திருந்தால், அந்த அருள்தேவனைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சியாவது அனுப்பியிருப்பேனே…’ என்ற புலம்பியவனாக, வாங்கியவன், குடிப்பது போல ஜன்னலருகே சென்று நின்றான். வேண்டுமென்றே வாயில் ஊற்றுவது போலத் தன் ஆடையை நனைக்க, மறு கணம்

“அட… சுட்டுவிட்டதா? பொறு துடைத்து விடுகிறேன்… என்று பதறியவராக, முந்தானையை எடுத்துக் கொண்டு வர,

“ஐயோ பாட்டி… இது காப்பி… சேலையில் கறை பட்டுவிடும்… போய்த் துணி எடுத்து வாருங்கள்…” என்று கூற,

“அட… சேலை கறைபடிந்தால் என்ன… உனக்குச் சுட்டுவிடும் கண்ணா…” என்றவாறு அவன் மார்பைத் துடைத்துவிடத் திட்டம் பாழாய்ப்போன பாரிதாபத்துடன் விழித்தான் ஏகவாமன்.

பின் ஒரு மிடறு குடித்துவிட்டு முகத்தைச் சுழித்து,

“பாட்டி… சீனி போதாது… கசக்கிறது…” என்று குறைபட,

“இதோ… ஓடிப்போய் எடுத்து வருகிறேன்…” என்றவாறு சமையலறை நோக்கிக் குடுகுடு என்று ஓட, உடனே அவர் சமையலறைக்குப் போன இடைவெளியில், ஜன்னலுக்குள்ளாக நீட்டப்பட மூன்று குவலைகளுக்குள்ளும் வேகமாகக் கோப்பியை நிறைத்து ஊற்ற, பாட்டி வந்தபோது ஒரு லீட்டர் காப்பிக் குறைந்திருந்தது.

“என்னடா… அதற்குள் அரைவாசியைக் குடித்துவிட்டாயா?” என்று சந்தேகத்துடன் கேட்க,

“ஆமாம் பாட்டி…” என்றான் அவசரமாக.

“டேய்… கொதிக்கக் கொதிக்க எப்படிடா குடித்தாய்….” என்று கேட்டவரிடம், எங்கே கள்ளம் பிடிபட்டு விடுமோ என்று பயந்தவனாக எஞ்சியதைச் சூடு உணர முதலே மடக்கு மடக்கு என்று குடித்துவிட்டு நிமிர, அவனுடைய காதிற்குள்ளாகவும், மூக்கிற்குள்ளாகவும், வாய்க்குள்ளாலும் சூடு தாங்க முடியாமல் புகை வெளியேறத் தொடங்கியது.

“ஐயே… ஜீனி போதாது என்று சொன்னாயே தங்கம்…” என்று கவலைப் பட்டவர், அவன் குடித்து முடித்த திருப்தியில், அவன் கரத்திலிருந்த ஜக்கை வாங்கிக்கொண்டு சமையலறை செல்ல, இவன்தான் நாக்கு வெந்து துடித்துப் போனான். மறு கணம் கமலாதேவி தேன் போத்தலுடன் நிற்க, அதை வாய்க்குள் கொட்டியவனுக்குச் சற்று நேரம் எடுத்தது சுயத்திற்கு வர.

“டேய்… எதற்கடா இப்படிக் கஷ்டப் படுகிறாய்… அம்மாவிடம் சொல்வதற்கென்ன…?” என்ற கடிய, இவனுடைய முகம் கனிந்தது.

“பாட்டி பாவம்மா… நமக்காகவே வாழ்கிறவர்கள்… ஆசை ஆசையாகச் செய்து கொண்டு வருவதை எப்படி மறுப்பது…” என்று கேட்டவனிடம்,

“ஆனாலும் எப்படிடா… அவ்வளத்தையும் குடித்தாய்?” என்று திகைக்க.

“இப்படித்தான்…” என்றவாறு ஜன்னல் புறத்தைக் காட்ட, எட்டிப் பார்த்த கமலாதேவிக்குச் சிரிப்புப் பீரிட்டுக் கொண்டு வந்தது.

அங்கே நற்குண சேகரம் ஒரு கல்லில் அமர்ந்திருக்க, ஒரு பக்கம் ஜெயவாமனும், மறு பக்கம் சௌந்தர்யாவும் அவர் தோளில் சாய்ந்து அமர்ந்தவாறு, முட்டைக் கோப்பியை சப்புக்கொட்டிக் குடித்துக் கொண்டிருந்தனர். அதில்,

“என்ன சொல்லு… என் மீனுவின் கைப்பக்குவம் கைப்பக்குவம்தான்…” என்று சொல்லி முடிக்கவில்லை, ஒரு கரண்டி சுழன்றவாறு அவர் முதுகில் வந்து விழுந்தது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தால், மீனாட்சிப் பாட்டி காளி அவதாரம் எடுத்துத் தன் கணவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“மீனு…” என்று இவர் தந்தியடித்தவாறு தன் பேரக் குழந்தைகளைப் பார்த்தால்,

அவர்கள் மீனாட்சிப் பாட்டியைக் கண்ட மறு கணமே அந்த இடத்தை விட்டு மாயமாக மறைந்து விட்டிருந்தனர்.

“டேய்… என்னை இந்த ராட்சஷியிடம் சிக்கவைத்து விட்டுச் சென்றுவிட்டீர்களே…” என்று புலம்பியவாறு தன் மனைவியை அசடு வழியப் பார்க்க.

“பெரிய மனுஷா… குழந்தைக்குச் செய்து கொடுத்த உணவையா சப்புக்கொட்டிச் சாப்பிடுகிறீர்கள்… உங்களை…” என்றவாறு நெருங்க,

“என்னது… குழந்தையா? எடியே… உனக்கே இது நியாயமாக இருக்கா… இந்த நேரம் அவன் திருமணம் முடித்திருந்தால், ஒரு குழந்தைக்கே அப்பனாகியிருப்பான்டி…” என்று வாய் பிளந்தவரிடம்,

“எதற்கு அவனுடைய கோப்பியைக் குடித்தீர்கள் என்று கேட்டால், வக்கணையாகப் பேசத் தெரிகிறது… பாவம், உடலில் தெம்பு வேண்டித்தானே… செய்து கொடுத்தேன்… அதைப் போய்ப் பறித்துக் குடிக்கிறீர்களே…” என்று கோபப் பட,

“பறித்துக் குடித்தேனா… எடியே! அவன்தான்டி கொடுத்தான்… நீ வேறு லீட்டர் கணக்கில் செய்து கொடுத்தால் அவனும் என்னதான் செய்வான்… பாவம்டி… இப்படிப் பாணங்களைக் கொடுத்தே அவனைக் கொல்லப் போகிறாய்…” என்று மிச்சத்தையும் குடித்தவாறு கூற,

“அவன் வளரும் பிள்ளை… சத்தாகக் குடிக்க வேண்டாமா…” என்று நியாயம் கூறிய மனைவியிடம்,

“என்னது… வளரும் பிள்ளையா… அவனுக்கு இருபத்தைந்து வயதுடி… அவனைப் போய் வளரும் குழந்தை என்கிறாயே…” என்றார் வாய் பிளந்தவாறு.

“அவன் வளர்ந்தால் என்ன… எனக்கு அவன் குழந்தைதான்…” என்று நொடிந்த பாட்டி, அவர் கரத்திலிருந்த குவலையைப் பறித்துக்கொண்டு,

“வெளிநாட்டிற்கு வேறு போகப்போகிறான்… நினைவிருக்கல்லவா… போகும் இடத்தில் இதெல்லாம் கிடைக்குமோ இல்லையோ… இப்படி உடம்பைத் தேற்றி அனுப்பினால்தான் உண்டு…” என்று கூறியவாறு சமையலறை நோக்கிச் செல்ல,

“அடப் போடி பைத்தியக்காரி… அவன் இங்கிருந்து அங்குப் போவதே, உன்னிடமிருந்து தப்பத்தான்… இது புரியாமல்…” என்று கிண்டலடித்தவாறு மறுபக்கம் செல்ல, இந்தக் காட்சியைக் கண்ட ஏகவாமனின் நெஞ்சம் பெருமையில் பூரித்தது.

அவன் முற்பிறப்பில் செய்த புண்ணியம்தான், இந்தக் குடும்பத்தில் வந்து பிறந்தது. திகட்டத் திகட்ட அன்பு, திகட்டத் திகட்டப் பாசம். எல்லா மகிழ்ச்சியும் மொத்தமாய் அவனுக்குக் கிடைத்த பேரானந்தம். இதைவிட ஒருத்தனுக்கு என்ன தேவை? ஆனாலும் அவன் முகத்தில் மெல்லிய வாட்டம்.

அவன் அமெரிக்கா சென்றபின், இரண்டு வருடங்களுக்கு ஊருக்கு வர முடியாது… அந்த இரண்டு வருடங்களும் இவர்கள் யாரையும் பார்க்காமல் எப்படி இருக்கப் போகிறான்… நினைத்தபோதே நெஞ்சம் அடைத்தது.

இது நாள்வரைக்கும் அவர்களைப் பிரிந்து அவன் இருந்தது கிடையாது. இதுதான் முதன் முறை, ஊரை விட்டு, உறவை விட்டு, வெளியே செல்வது.

வேதனையுடன் திரும்ப, அங்கே அன்னை நீளியிருக்கையில் அமர்ந்தவாறு, கீரையை உடைத்துக் கொண்டிருந்தார். எப்போதும் போல அவருடைய மடி அவனை அழைக்க, சோர்வுடன் சென்று இருக்கையில் அமர்ந்தவன், தாயின் கரங்களிலிருந்த கீரையைப் பறித்து ஓரமாகப் போட்டுவிட்டு, அவர் மடியில் தொப்பென்று தலையை வைத்துப் படுத்தவாறு விழிகளை மூட, எப்போதும் போலத் தன் மகனின் தடித்த சுருண்ட குழலை வருடிக் கொடுத்தவாறு,

“என்னடா ராஜா… எதற்கு இந்தச் சங்கடம்?” என்றார் மென்மையாய்.

எப்போதும் மனதில் சங்கடம் எழும்போதெல்லாம் அவருடைய மடியைத் தேடிவரும் மகனைப் பற்றி அவருக்குத் தெரியாதா என்ன? தன் செயலை வைத்தே, உணர்வைப் புரிந்துகொள்ளும் தாயை, விழிகள் திறந்து பார்த்தவன்,

“ஐ ஆம் கோய்ங் டு மிஸ் யு ஆல் மா… அமெரிக்கா போனால் மீண்டும் இந்த மடி சாய இரண்டு வருஷங்கள் எடுக்குமல்லவா… அதுவரை ஜெயனும், சௌந்தர்யாவும்தான் உரிமை கொண்டாடுவார்கள்… உங்கள் சோலையில் முகம் துடைக்க முடியாது… அப்பாவின் அங்கவஸ்திரத்தில் வியர்வை துடைக்க முடியாது… தாத்தாவிடம் போர்ப்பயிற்சி பயில முடியாது, பாட்டியின் அன்புத் தொல்லை கிடையாது…” என்றவன், தன் தாயின் மென் கரத்தைப் பற்றி மார்போடு அழுத்திக் கொடுத்தவாறு,

“உங்களை எல்லாம் விட்டுவிட்டு எப்படி இருக்கப் போகிறேன்…” என்றான் ஏக்கத்துடன். மெல்லியதாகச் சிரித்த கமலாதேவி,

“இது நீ ஆசைப்பட்டது தானே கண்ணா… தவிர உன்னுடைய படிப்பு, இந்தக் கிராமத்திற்காகப் பயன்படப் போகிறது என்றால், எந்தச் சிரமமாக இருந்தாலும் தாங்கிக்கொள்ளத்தானே வேண்டும்… நாங்கள் எங்கே ஓடப் போகிறோம்… இங்கேதானே இருக்கப் போகிறோம்… இரண்டு வருடங்கள்தானே… கண் மூடி முழிக்கப் பறந்துவிடும்… நீ திரும்பி வந்ததும், இதோ… எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் படுத்திருக்கலாம்… சரியா… கவலைப் படாதே கண்ணா…” என்று கூற ஒரு பெருமூச்சுடன் அன்னையின் கரத்தை அணைத்துப் பிடித்தவாறே சரிந்து படுத்தவனுக்கு ஏனோ தவறு செய்வது போல நெஞ்சம் சற்றுத் தடுமாறியது.

ஒரு வேளை அந்த உள்ளுணர்வை உணர்ந்து அவன் போவதை நிறுத்தியிருந்தால், பின்னால் வர இருந்த ஆபத்தைத் தடுத்திருப்பானோ?

What’s your Reaction?
+1
14
+1
0
+1
4
+1
0
+1
0
+1
3
Vijayamalar

Recent Posts

புயலோடு மோதும் பூவை – 10

(10) இதங்கனை கண் விழித்தபோது எல்லாமே மங்கலாகத்தான் தெரிந்தன. தலை வேறு விண் விண் என்று வலிக்க ஒற்றைக் கரத்தால்…

15 hours ago

புயலோடு மோதும் பூவை – 9

(9) இப்போது அவளை எப்படி அழைத்தான்... இதங்கனை என்றா? உடலில் உள்ள இரத்தம் அத்தனையும் வடிந்து செல்ல அவனை விறைத்துப்…

3 days ago

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 23/24

(23) இரண்டு நாட்கள் கழிய, அன்றும் அலரந்திரிக்குத் தூக்கம் சுத்தமாக வருவதாக இல்லை. நடந்த சம்பவத்தை எண்ணி எண்ணித் தவித்தவளுக்கு…

5 days ago

புயலோடு மோதும் பூவை – 8

(8) குளியலறையை  விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாகச் சுருண்டு சிலுப்பிய தலை முடியைக் கரங்களால் வாரி விட்டுப் பின்…

6 days ago

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 22

(22) இதோ… எல்லாம் முடிந்தது… பெய்யும் மழையில் இரத்தம் கரைந்து போக, நசிந்து போயிருக்கும் தன்னவளைப் பார்க்கும் சக்தியில்லாதவனாக எகிறித்…

7 days ago

புயலோடு மோதும் பூவை – 7

(7) அவள் நினைத்தது போலப் பாழாய்ப் போன அரவனில்லை. அங்கே வேலைசெய்யும் ஒரு சீனத்துப் பெண்மணி. அவளுடைய கரங்களில் ஒரு…

1 week ago