Categories: Ongoing Novel

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 2/3-4

(3)

 

என்னது…! அவள் பெயரில் மலையா…? இவர்களுக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா… யாராவது பெரிய மலையை அதுவும் அந்த அழகான இடத்தை அவள் பெயருக்கு வாங்கி விடுவார்களா? நம்ப மாட்டாதவளாக,

“என்ன…! என்ன உளறுகிறீர்கள்… என் பெயரில் மலையா… நீங்கள் ஏதோ தப்பாகப் புரிந்துவைத்திருக்கிறீர்கள்… என் பெயரில் அவர் வாங்க வேண்டிய அவசியம் என்ன…? நோ… இருக்காது… இருக்கவும் முடியாது…” என்று அவள் சீற, பொறுமையிழந்த தலைவர் மீண்டும் இருக்கையில் தன் காலைப் போட்டு, தலையில் அடித்துக்கொண்டு

“அய்யையையே…!. இது வேலைக்காகாது…! டேய் மவனே… அவனைப் போடுவதுக்குப் பதில் இவளைப் போட்டுத் தள்ளு… இவள் இருக்கும் வரைக்கும் அந்த இடம் உனக்குச் சொந்தமாகாது… அதை விட இவளைப் போட்டுத் தள்ளிவிட்டால்… அந்த இடம் இவனுக்குப் போகும். இவனையும் முடித்துக்கொண்டோம் என்று வை… எல்லாச் சொத்தும் நமக்குத்தான்…” என்ற முடிக்கவில்லை, விக்ரமனின் துப்பாக்கி. இப்போது மிளிர்ம்ருதையின் நெற்றிப்பொட்டில் நிலைத்தது.

இதைக் கண்டதும் அவளுக்கு எப்படியோ. அபயவிதுலன்தான் துடித்துப்போனான்.

“ஏய்… துப்பாக்கியை அவளிடமிருந்து விலக்கு… உனக்கு என்ன அந்த இடம்தானே வேண்டும்… எழுதித் தருகிறேன்… லீவ் ஹேர் அலோன்…” என்று கத்த, மேலும் அதிர்ந்து போனாள் மிளிர்ம்ருதை. நம்பாத பாவனையுடன் அவனைத் திரும்பிப் பார்க்க, அவனுடைய விழிகளில் கண்ணீர் நிரம்பியிருந்தது. முகம் சிவந்து போய்க் கழுத்து நரம்புகள் புடைத்துப்போயிருந்தன.

எந்த நேரமும் வெடித்துவிடுவான் என்பதுபோல அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்க, அவனுடைய தோற்றத்தைக் கண்ட மிளிர்ம்ருதைதான் ஆடிப் போனாள்.

அதையே மற்றவர்களும் பிரதிபலிக்க,

“அடேங்கப்பா… அவளுக்கு ஒன்றென்றதும் என்னமா துடிக்கிறான்…” என்று வியந்த தலைவர், டேய் எடுத்து வாருங்கள்டா அந்தப் பத்திரத்தை…” என்ற உத்தரவிட, மறு கணம் அவன் முன்னால் வந்து விழுந்தது முத்திரையிட்ட தாள்கள் சிலது.

“ம்… முதலில் கையெழுத்திடு…” என்றவாறு பேனாவைக் கொடுக்க, அவனுடைய வலது கைக் கட்டு மட்டும் அவிழ்க்கப் பட்டது. அடுத்தக் கணம் சற்றும் யோசிக்காமல், அவர்கள் நீட்டிய இடங்களில் கையெழுத்திட, மீண்டும் கை கட்டப்பட்டது. அதைப் பறித்து மிளிர்ம்ருதையின் முன்னால் வைத்த தலைவர்,

“ம்… நீயும் கையெழுத்துப் போடு…” என்றார். ஒரு கணம் அந்தத் தாளையே வெறித்துப் பார்த்த மிளிர்ம்ருதைக்கு நம்பவே முடியவில்லை.

“நா… நான் எதற்குப் போடவேண்டும்…” என்று தடுமாற,

“அந்த இடத்தைப் பார்த்துக்கொள்ளும் உரிமை அவனுக்கிருந்தாலும், உனது பெயரில்தானே வாங்கியிருக்கிறான். அதனால் நீயும் கையெழுத்துப் போட்டால்தானே அது செல்லுபடியாகும். ம் போடு…” என்று உத்தரவிட, அடுத்தக் கணம் அவளுடைய கையெழுத்தும் வாங்கப்பட்டது. அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. எதற்காக அவன் தன் பெயரில் அந்த இடத்தை வாங்கவேண்டும். இதில் என்ன சூதிருக்கிறதோ…’

அதே நேரம் கையெழுத்து வாங்கிய உடன், விரைந்து அபயவிதுலனைச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர், ஓங்கி அவன் கன்னத்தைப் பொத்தி ஒன்று விடக் கதிகலங்கிப்போனாள் மிளிர்ம்ருதை.

“அதுதான் உங்களுக்கு வேண்டியது கிடைத்துவிட்டதே… பிறகு எதற்காக அவரை அடிக்கிறீர்கள் என்று இவள் பதற, அவளை ஏறிட்ட தலைவர்,

“இதற்காகவா நாங்கள் வந்தோம்… நாங்கள் வந்ததே வேறு விஷயமாக… வந்த இடத்தில் நீ வந்து மாட்டிக்கொண்டாய்… இப்போது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்…” என்ற தலைவர், பின் அபயவிதுலனை வெறித்துவிட்டு, மிளிர்ம்ருதையைப் பார்த்து,“ எங்களைப் பற்றிய ஆதாரம் சிலதை வைத்துக்கொண்டு நிறைய ஆட்டம் காட்டகிறான்மா… அதைத் தரச் சொல்லு முதலில்…” என்றார் அவர் எரிச்சலாக.

“எ… என்ன ஆதாரங்கள்…” என்று இவள் திக்க,

“அது ஒன்றுமில்லை… நானும் என் பையனும் ஒரு சில பெண்கள் கூட, சும்மா தொட்டு விளையாடிக்கொண்டிருந்தோமா… கழுதைகள், சின்னப்பிள்ளைகள் வேறையா… எப்படி நடந்துகொள்வதென்று தெரியாது கத்தத்தொடங்கிவிட்டார்கள்… அதை… உன் புருஷன் உன்மையென்று நம்பி காணொளி எடுத்து வைத்து எனக்கே திரும்பி அனுப்புகிறான்மா… தவிர, அந்த ஈழத்தமிழர்களின் படு கொலையில் கொஞ்சுண்டு பங்கு என்னுடையதும் இருக்கிறது… நான் வெறும் கட்டளைதான் போட்டேன்மா. அதில் வெறும் இரண்டு லட்சம் பேர்தான் இறந்தார்கள்… இவன் கொதிப்பதைப் பார்த்தால், ஏதோ கோடிக்கணக்கில் இறந்தது போல ரொம்பத் துள்ளுகிறான்… இதெல்லாம் பெரிய விஷயமா என்ன… அதைப் போய்ப் பெரிசாக எடுத்துட்டு… அது வெளியே வந்தால், என் அரசியல் வாழ்க்கைக்கு என்னாகும் என்று பயப்புள்ள யோசிக்கவே மாட்டேன்கிறான்… அதுதான்… அந்தக் காணொளிகளையும், ஆதாரங்களையும் மட்டும் கொடுத்துவிடச் சொல்லு, நான் போய்விடுகிறேன்… அதன் பிறகு உங்கள் பக்கம் வரவே மாட்டேன்…” என்று அப்பாவி போலக் கூற, மிளிர்ம்ருதையோ விறைத்துப் போய் அபயவிதுலனை ஏறிட்டாள்.

அவனும் அவளைத்தான் வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்ன தம்பி… தருகிறாயா…” என்று விஜயசிங்க கேட்ட நேரம், அபயவிதுலனின் பான்ட் பாக்கட்டிலிருந்த கைப்பேசியில் மெல்லிய அதிர்வு. அதை உணர்ந்தவனின் உதடுகளில் அதுவரையிருந்த இறுக்கம்  மறைந்து அங்கே மெல்லிய புன்னகை உற்பத்தியானது. உடனே மிளிர்ம்ருதையிடமிருந்து தன் கவனத்தைத் திசைதிருப்பிய அபயவிதுலன்…

“அதைக் கொடுத்தால் நீ செய்தது குற்றமில்லையென்றாகிவிடுமா…” என்றான் ஏளனமாக. அவன் கூறி முடிக்கவில்லை, அவன் தாடையில் பலமாக இன்னொரு குத்து விழ, பல் பட்டு உதடு கிழிந்து இரத்தம் கசிய, அதை நாக்கால் வருடி இரத்தத்தைத் துடைத்துத் துப்பியவன், அலட்சியத்துடன் நகைத்து,

“நீ நிறையத் தாமதமாக வந்துவிட்டாய் விஜயசிங்க…” என்றான் தன் நகைப்பை விரிவு படுத்தியவாறு.

“என்ன உளறுகிறாய்…?” என்று விஜயசிங்க எச்சரிக்கையுடன் கேட்க,

“ஹா.. ஹா…” என்று இப்போது சற்றுப் பெரிதாக நகைத்தவன்,

“எதிர் கட்சித் தலைவர் மதிப்புக்குரிய விஜயசிங்கவின் மகனின் காம லீலைகள்… தந்தையின் குதூகலம்… இருட்டு அறைக்குள்…” என்றவன் அதற்கு மேல் சிரிப்பை அடக்க முடியாமல்,“ஹா ஹா ஹா…” என்று பலமாகச் சிரிக்கத் தொடங்க அதிர்ந்துபோனார் விஜயசிங்க.

“எ… என்ன உளறுகிறாய்…” என்று சீற, உதட்டோரம் வடிந்த இரத்தத்தை மீண்டும் நாக்கால் வருடிக் கொடுத்த அபயவிதுலன்,

“கை வலிக்கிறது… கொஞ்சம் கழற்றிவிடுகிறாயா… சொல்கிறேன்…” என்றான் கெஞ்சுவது போல.

அபயவிதுலனை எரிச்சலோடு பார்க்க,

“ஊப்ஸ்… கொஞ்சம் அதிகமாகத்தான் நடந்துகொள்கிறேனோ….” என்று யோசிப்பது போலக் கேட்டவன், பின்,“சரி சரி… கோவிக்காதே… சொல்கிறேன்…” என்றவாறு நிமிர்ந்து அமர்ந்தவன், யாரோ கிச்சுக் கிச்சு மூட்டியது போல, மீண்டும் சிரித்தான். சிரித்தவாறே,

“சாரி… தலைவரே… இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் நிலையை நினைத்துப் பார்த்தேனா சிரிப்பை அடக்க முடியவில்லை… சரி சரி முறைக்காதே… சொல்கிறேன்… நீ வருகிறாய் என்று தெரிந்து…” என்றவன் பக்கத்திலிருந்த அடியாளை அழைத்து,

“தம்பி, என் வலது பான்ட் பாக்கட்டில் ஒரு கைப்பேசி இருக்கிறது பார்… எடுக்கிறாயா…” என்று கேட்க, அவன் திருத் திரு என்ற விழித்தான்.

“தம்பி பயப்படாதேப்பா… எடு… அங்கே ஒன்றும் குண்டில்லைப்பா… என்னுடைய சேஃப்டி முக்கியம்… அங்கேயெல்லாம் குண்டு வைப்பேனா… குறைந்தது ஆறு குழந்தைகள் பெறவேண்டும் என்று எண்ணி இருக்கிறேன்… பயப்படாமல் எடுப்பா…” கிண்டலாக மிளிர்ம்ருதையைப் பார்த்தவாறு கூற, அவளோ அந்த நிலையிலும் அவனைக் கொலைப்பார்வை பார்த்தாள்.

அவளை லட்சியம் செய்யாது, மீண்டும் அந்த அடியாளைப் பார்த்து…”இன்னுமா நம்பிக்கை வரவில்லை?” என்று வியந்தவன் போலக் கேட்க, அவனும் ஓரளவு திடம் வந்து, சற்றுத் தள்ளி நின்றவாறே, கைப்பேசியை எடுக்க,

“தம்பி… அதைத் திறப்பதற்கு என்னுடைய மூஞ்சிவேண்டும்… கொஞ்சம் கைப்பேசியை என் மூஞ்சிக்கு முன்னால் காட்டு தம்பி…” என்றதும், அவ்வாறே காட்டப்பட, பின் அவனுடைய கட்டைவிரல் ஐடி கேட்டது. அவன் கட்டை விரலுக்குப் பிடிக்க, அதைத் தொட்ட மறு கணம், கைப்பேசி உயிர்ப்பிக்க, அதைக் கண்டவனின் முகம் மலர்ந்தது

.“சரி சரி… அதில் ஒரு பச்சை பட்டன் இருக்கிறதல்லவா….”

“ஆமா சார்…!”

“அதைக் கொஞ்சம் அழுத்திவிடு…”

“அழுத்திட்டேன் சார்…!”

“இப்போது என்ன சொல்லுகிறது…”

“செ… சே…. சேன்…” என்று அந்த அடியாள் திணற, அவனுடைய ஆங்கிலப் புலமையின் மெய் நிலை புரிந்த அபயவிதுலன்,

“அதிகம் சிரமப்படாதே… கொஞ்ம் முன்னால் வந்து காட்டு…” என்றதும், அவன் முகத்துக்கு முன்னால் பிடித்தான் அந்த அடியாள். உடனே மின்னிக்கொண்டிருந்த எழுத்துக்களைக் கண்டு முகம் மலர,

“சென்டிங்… என்று சொல்கிறது…” என்றான் அபயவிதுலன் கிண்டலாக. அதைக் கேட்டதும்,

“சென்டிங்கா… என்னடா சென்டிங்…” என்றவாறு விஜயசிங்க அடியாளின் அருகே வர, நமுட்டுச் சிரிப்புச் சிரித்த அயபவிதுலன்,

“அது ஒன்றுமில்லை தலைவரே… நீங்கள் வருவதற்கு முன்னாடி ஒரு காணொளி பதிவேற்றம் பண்ணியிருந்தேன்… நெட்வேர்க் கொஞ்சம் தாமதம் என்பதால், அதைப் பதிவேற்றம் பண்ண நேரம் எடுத்ததா… காணொளி வேற கொஞ்சம் உங்களைப் போலவே பெருசா… இப்போதுதான்… பதிவேற்றம் பண்ணி முடிந்தது. அதைத்தான் சென்ட் பண்ணச் சொன்னேன்…” என்று கூற, தலைவருக்கு ஏதோ சற்றுப் புரிந்தது.

விக்ரமனும் பதற்றத்தோடு அவனருகே வந்து,

“என்ன காணொளி அது…” என்று கர்ஜிக்க,

“தொலைக்காட்சியை ஆன் பண்ணுங்கள் சார்…! புரியும்…” என்றதும் அடியாளைப் பார்க்க, தொலைக்காட்சி உயிர்ப்பிக்கப்பட்டது. பின்பு விக்ரமனைப் பார்த்து,

“க்ரோம்காஸ்டுக்குக் கனக்ட் பண்ணி, காணொளியை ஓடவிடு…” என்று கூற, அவ்வாறே செய்யப்பட, அடுத்து விரிந்தது படக் காட்சி.

பள்ளிக்கூட மாணவிகளை ஒரு அறைக்குள் அடைத்து வைத்து தந்தையும் மகனுமாய்ச் செய்த அட்டூழியங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது.

அதைக் கண்ட மிளிர்ம்ருதை, மூச்சே எடுக்க மறந்தாள். அதற்கு மேல் மிளிர்ம்ருதையால் அந்தக் காணொளியைப் பார்க்கவே முடியவில்லை. ஒன்றா இரண்டா… எத்தனை பெண்கள்… அதைப் பார்க்கப் பார்க்க வெறி வந்தது. கடவுளே…! பெரிய பதவியில் இருக்கும் மனிதன் செய்யும் வேலையா இது… என்ன காரியம் செய்திருக்கிறார்… பதவி கிடைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா… அவர்களின் வலியை வேதனையைக் கூட உணராத ராட்சஷர்களா இவர்கள்… இவர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்ணுக்கு இப்படி நடந்தால்தான் அதன் வலியை இவர்கள் புரிந்துகொள்வார்கள்….’ என்று சீற்றத்துடன் எண்ணியவள், தன் எண்ணம் போன போக்கைப் பார்த்து விதிர் விதிர்த்துப் போனாள்.

இதைத்தானே அவனும் செய்தான். அவள் சகோதரிக்குச் செய்த குற்றத்திற்கு, அந்த வலியை உணரவைக்கத்தானே அவளைப் பயன் படுத்தினான்… இந்த வீடியோவைப் பார்க்கும் போதே பதறுகிறதே… நேரடியாகப் பாதிக்கப்படும் போது, எப்படித் துடித்திருப்பான்…

ஆனால் அபயவிதுலனோ, சற்றும் ஏளனம் மாறாமல்,

‘இதை என்னுடைய வெப் பேஜ், ட்விட்டர், யு டூப், என்று அத்தனை சமூகவலைத் தளங்களிலும் போட்டுவிட்டேன் சார்…! இனி எங்கே வேண்டுமானாலும் நீங்கள் போய்ப் பார்க்கலாம்… கொடு கொடு என்று என்னைத் தொல்லைப்படுத்த வேண்டியதில்லை…” என்று சிரிக்க, இவர்களின் முகம் வெளிறிப்போனது.

“ஏய்… ஐ கில் யு…” என்றவாறு விக்ரமன் அவனை நெருங்க,

“என்னைக் கொல்வது இருக்கட்டும்… முதலில் உன்னைக் காப்பாற்றிக் கொள்…” என்று கிண்டலுடன் கூற,

“ஸ்மார்ட் ப்ளே…” என்றான் விக்ரமன் கர்ண கடூரமாக.

“யெஸ்… இதை எப்போதோ அனுப்பியிருப்பேன்… பட் நீயோ அரசியல் வாதி. அதுவும் சற்று வருடங்களுக்கு முன்னால், ஆளுங்கட்சியாக வேறு இருந்தாய்… உன்னுடைய பலம் எதுவரை என்று எனக்குத் தெரியாதா… இப்போது கூடப் பார், என்னுடைய அத்தனை பாதுகாப்பையும் உடைத்துக்கொண்டு எதுவோ நுழைந்தது போல, உள்ளே வந்துவிட்டாய்… இப்படிப் பட்ட உன்னோடு, தேவையற்று மோத நான் என்ன முட்டாளா… இதை முன்னமே அனுப்பியிருந்தால் என்னென்ன விளைவுகளை நான் சந்தித்திருப்பேன் என்பது எனக்குத் தெரியும்… ஆனால்… என்று என் மனைவியின் படத்தை எனக்கே அனுப்பினாயோ, அப்போதே நான் விழித்துக்கொண்டேன்… முதலில் இவளைப் பாதுகாப்பாக ஒரு இடத்திற்குக் கொண்டு சென்ற பின்புதான் இதையெல்லாம் வெளியிடவேண்டும் என்று நினைத்தேன்… ஆனால் நான் நினைத்ததை விட வேகமாகத்தான் செயல்பட்டிருக்கிறீர்கள்… உங்களை வாசலில் கண்ட உடனேயே இனி தாமதித்தும் பயனில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்… உடனேயே அறிவிக்க வேண்டியவர்களுக்கும் அறிவித்தாகிவிட்டது… இன்னும் அரை மணி நேரம்… அதன் பிறகு நாளை செய்தித்தாளில் உங்கள் பெயர்தான் முக்கியத் தலைப்புச் செய்தி…” என்று கூற அடுத்தக் குத்து அவன் தாடையில் விழுந்தது.

ஆனால் அபயவிதுலனின் சிரிப்பு மட்டும் நிற்கவேயில்லை. அதைக் கண்டு கோபப்பட்ட விர்கரமன், மிளிர்ம்ருதையின் அருகே சென்று,

“ம்… நாட் பாட்… அதிகத் தெளிவாகத்தான் செயற்பட்டிருக்கிறா ய்… ஆனால் பார்… உன் மனைவி இப்போது நம் கையில்…

என்ன இந்தக் காணொளி வைரலாக இன்னும் ஒரு மணி நேரம் இருக்குமா… அந்த ஒரு மணி நேரம் நமக்குப் போதாது, தடுத்து நிறுத்த… அதற்கு முதல்” என்ற விக்ரமன் மளிர்ம்ருதையின் அருகே சென்றான்.

அபயவிதுலனை ஒரு பார்வை பார்த்து,

“ஆஃப்ட்ரால் ஒரு பிஸ்னஸ் மான், உனக்கே இவ்வளவிருந்தால், அரசியல்வாதி எங்களுக்கு எவ்வளவு இருக்கும்… இவள் உன் மனைவிதானே…. காணொளிதானே போட்டாய்… இவளையும் அனுபவிக்கிறேன்… அதையும் படமாக எடுத்துப் போடு…” என்றவாறு அவளை நெருங்க முயல, இவனுடைய உடல் தூக்கிப்போட்டது.

கண்முன்னே தன் சகோதரியின் நிலை வந்து போகத் துடித்துப்போனான் அபயவிதுலன். அன்று சகோதரியைக் காப்பாற்ற அவனிடம் சக்தியில்லை… இன்று தன்னவளைக் காப்பாற்ற உடலில் வலுவிருந்தது… ஆனால் அது முடியாதவாறு கைகள் கட்டப்பட்டிருந்தன. உடல் உதற, முகம் வெளிறப் பதறித் துடித்தவன், ஆழ்ந்த மூச்செடுத்துத் தன் மண்டைக்குள் ஓடிய நினைவுகளை உதறித் தள்ளியவாறு,

“ஸ்டாப்… ஜெஸ்ட் ஸ்டாப்… உன்னுடைய விரல் நுணி… அவள் மீது பட்டாலும், உன்னுடைய உயிர் உன் உடம்பில் இருக்காது…” என்று பல்லிடுக்கில் வார்த்தைகளைக் கக்கியவனை அலட்சியமாகப் பார்த்த விக்ரமன்,

“அப்படியா… பார்க்கலாமா…” என்றவாறு அவளுடைய தலை முடியைத் தன் கரங்களால், கவ்விப் பற்றச் செல்ல மறு கணம் புயலானான் அபயவிதுலன்.

(4)

 

தனக்குப் பின்னால் நின்றிருந்தவனை ஓங்கித் தன் பின் மண்டையால் அடிக்க, அதை எதிர்பார்க்காதவன் சுவரோடு மோத, வலித்த தலையைப் பற்றிக் கவலைப் படாது, கதிரையோடு சரிந்து விழுந்தவன், தன் காலைத் தரையில் வைத்து உந்த, உந்திய வேகத்தில் விக்ரமனின் அருகே வந்த கணம், கதிரையோடு சுழன்று, அவனுடைய ஆண்மையில் ஓங்கி உதைந்தான்.

எதிர்பாராத விழுந்த அடி, சுழீர் என்று கீழிருந்த தலை உச்சிக்கு வலி சென்று அடிக்க, வலியில் சுனங்கியவாறு மிளிர்ம்ருதையின் மீது விழத் தொடங்கியவன் நிழல் கூட அவள் மீது படும் முதல் தன் வலது காலை மடித்த வேகத்தில் அவன் முகத்தை நோக்கி விசுக்க, குறி தப்பாது, நெற்றியில் பட்ட கணம், தன் ஆண்மையைப் பிடித்தவாறு பின் பக்கமாகச் சரிந்து, தொப்பென விழுந்து துடிக்கத் தொடங்கினான் விக்ரமன்.

இதைக் கண்டு பதறிய தலைவர்,“மகனே…” என்று கதறியவாறு ஓட, தங்கள் தலைவரின் மகன் தரையில் விழுந்து துடிப்பதைக் கண்ட அடியாட்கள் ஆவேசத்துடன் அவனை நோக்கிப் பாய, மீண்டும் உந்தி மிளிர்ம்ருதைக்கு, முன்பாக வந்து நின்றவன், சரிந்திருந்த வாக்கிலேயே தன் முன்னால் வேகமாக வந்தவனின், முழங்காலில் உதையை, முழங்கால் சிரட்டை தெறிக்க வலியுடன் விக்ரமனுக்கு மேலாக விழுந்தான் அவன்.

இன்னொருவனின் இடையில் உதைய அவன் சுவரோடு மோதி இவன் மீது விழ, தன் கால்களைத் தூக்கி விழுந்தவனைத் தாங்கியவன், அவனுக்குப் பின்னால் நின்றவனை நோக்கித் தள்ளிவிட, பின்னால் ஓடிவந்தவனின் மீது விழுந்த வேகத்தில் இருவரும் தரையில் கிடந்தனர்.

தள்ளப்பட்டவனின் கீழ் நசுங்கியவன், எப்படியோ அவனிடமிருந்து விலகி எழுந்து, அபயவிதுலனை நோக்கிப் பாய, அபயவிதுலனோ, இடது காலை அசூர வேகத்தில் அவன் முழங்காலுக்குக் கீழ் உதைய, தடுமாறி, இவன் பக்கமாக விழுந்தவனின் மார்பிலும் முகத்திலும் மாறி மாறி காலால் பலமாக அடித்துக் கொண்டிருக்கும் போதே, மறுபக்கம் ஒருவன் வருவது தெரிந்தது. தன்னிடம் அடிவாங்கிக் கொண்டிருந்தவனை, உதைந்துவிட்டுச் சுழன்று எழுந்து பின்னால் வந்தவனின் தலையில், தன் தலையால் விசிறிப் பலமாக அடித்துப் பொறிகலங்க வைத்துத் தோளால் எட்டித் தள்ள, சப்பென்று தள்ளிப் போய் விழுந்தான் அவன்.

அடுத்து அபயவிதுலனின் கவனம், தலைவரை நோக்கிப் பாயத் தொடங்கிய தருணத்தில், அவனுடைய அறையின் வாசல் கதவு.. பெரும் சத்தத்துடன் படார் என்று திறந்துகொண்டது.

அந்தச் சத்தத்தை வைத்து யார் வருகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட அபயவிதுலன், உடனே பாய்ந்து, முன்பு எங்கிருந்தானோ, அதே இடத்தில் கதிரையோடு சென்று அமர்ந்துகொண்டவனின் முகத்தில் எல்லையில்லா வலியும், சோகமும் அப்பிக்கொண்டது.

திடீர் என்று அபயவிதுலன் நல்லவன் போலச் சென்று அமர்ந்திருந்ததைக் கண்ட, தலைவரோ, எதுவும் புரியாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தார்.

அடுத்துத் தப தப என்று பல காவல் துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளே துப்பாக்கியுடன் நுழைந்தனர்.

அவர்கள் அங்கே கண்ட காட்சியில் திகைத்துப்போய், எதுவும் புரியாது யோசனையுடன் தலைவரையும், அபயவிதுலனையும் மிளிர்ம்ருதையையும் மாறி மாறிப் பார்த்தனர்.

சட்டையில் இரத்தம் படிந்திருக்கக் கதிரையில் கரங்களும், உடலும் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தான் அபயவிதுலன். சற்றுத் தள்ளி மருண்ட பார்வையில் நடந்ததை நம்ப முடியாத தன்மையில் நின்றிருந்தாள் மிளிர்ம்ருதை.

தலைவரோ என்ன நடந்தது என்கிற எண்ணமே இல்லாமல் தான் ஏதோ தூக்கத்திலிருப்பது போல மகனின் அருகே அமர்ந்து விழித்துக்கொண்டிருக்க, விக்ரமனோ தரையில் சுயநினைவின்றிக் கிடந்தான். அவனைச் சுற்றி மூவர் தரையில் விழுந்திருக்க, சற்றுத் தள்ளி இருவர் ஒவ்வொரு பக்கமாகச் சரிந்திருந்தனர். இந்தப் பக்கம் இரத்தம் கொட்ட நின்றிருந்தான் அபயவிதுலன். அவனை நெருங்கிய காவலதிகாரி, அவனுடைய கட்டை அவிழ்த்து விட்டவாறு

“என்ன நடந்தது?” என்று கேட்டார்.

வலியில் முகத்தைச் சுருக்கியவாறு, தலையை அழுந்த பற்றியவன், வலி தாங்க முடியாதவன் போலக் குனிய,

“ஆர் யு ஓக்கே மிஸ்டர் அபயவிதுலன்…” என்றார் அதிகாரி.

“ஐ ஹோப் சோ சார்…!” என்றான் நடுங்குவதுபோல.

“என்னாச்சு…” என்றார் அதிகாரி மீண்டும்.

“தெரியவில்லை சார்…! திடீர் என்று உள்ளே வந்தார்கள். என்னைக் கட்டிவைத்து, சில தாள்களில் கையெழுத்திடச் சொன்னார்கள். மறுத்தேன் சார்…! அதற்கு மண்டையில்… துவக்கால் இப்படி…” என்றவன் மீண்டும் விழிகளைச் சுருக்கி வலிப்பது போலப் பல்லைக் கடித்தவன், கையைத் தூக்கிப் பார்த்து,

“ஐயோ… ப்ளட் சார்…! எனக்கு இரத்தம் என்றால் பயம் சார்…! நேற்றுதான் மருத்துவமனையிலிருந்து வந்தேன் சார்…! மீண்டும் அங்கே போக வைத்துவிட்டார்களே சார்…!” என்று பதற, மிளிர்ம்ருதையும், எதிர்க்கட்சி தலைவரும் நம்பமுடியாமல் வாய் பிளந்து அதிர்ச்சியுடன் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“அந்தப் பேப்பர்ஸ் எங்கே…?” என்று அதிகாரி கேட்க, அதுவரை தலைவரின் கையிலிருந்த தாள்களைக் காட்டி…

“அதோ… அவர் வைத்திருக்கிறார் சார்…!” என்றதும், அதை வாங்கிப் பார்த்தார் அந்த அதிகாரி. புருவங்கள் சுருங்க தலைவரை எறிட்டுவிட்டு, கீழே விழுந்திருந்தவர்களைச் சுட்டிக்காட்டி,

“இவர்களை யார் அடித்தார்கள்…” என்றார் சந்தேகமாக.

அதைக் கேட்டதும், அவசரமாக முன்னுக்கு வந்த தலைவர்,

“இவன் தான் அவர்களை அடித்தான்… இவனைக் கைது பண்ணு..” என்று ஆக்ரோஷத்துடன் கத்தியவாறு வர, அதைக் கேட்டு அதிர்ந்த அபயவிதுலன்,

“ஐயோ…! நானா அடித்தேன்…? பொய் சொல்வதற்கு ஒரு அளவில்லையா சார்…? நான் எப்படி” என்று தலைவரைப் பார்த்து அழுகையூடே கேட்டவன், பின் காவலதிகாரியைப் பார்த்து,

“எப்படிச் சார்…! என்னைத்தான் கட்டிப் போட்டிருந்தார்ளே… நான் எப்படி அவர்களை அடிப்பேன்.. நான் என்ன ப்ரூஸ்லியா இல்லை ஜக்கிசானா… கை கட்டியிருந்த நிலையில் இப்படி இவர்களை அடித்து விழுத்த…” என்று பரிதாபமாகக் கூற,

“இப்போது கூட நீங்கள் வராமல் இருந்திருந்தால் என்னை அடித்தே கொண்டிருப்பார்கள் சார்…!” என்றான் அப்பாவி போல. அதை உணர்ந்து, ஆமோதிப்பதுபோல, சந்தேகத்துடன் தலைவரைப் பார்த்தார் காவலதிகாரி.

தலைவருக்குத்தான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. வாய் பொத்தி நின்றவர், பின் அதிகாரியைப் பார்த்து,

“என்னமா நடிக்கிறான்… சாமின்ட… நான் சொல்வது உண்மை…! இவன் பொய் சொல்கிறான்… ப்ரூஸ்லி, ஜக்கிசான், ஜெட்லி எல்லாரையும் கலந்தது போலப் பாய்ந்து பாய்ந்து அடித்தான் என்னை நம்பு…” என்று பரிதாபமாகக் கூற, மருண்ட பார்வையுடன் நின்றிருந்த மிளிர்ம்ருதையை நெருங்கிய அதிகாரி,

“இங்கே என்ன நடந்தது… இவர் சொல்வது உன்மைதானா” என்றார் அழுத்தமாக. அவளோ உடலிறுக இன்னும் நம்ப மாட்டாதவளாக அபயவிதுலனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“சொல்லும்மா… என்ன நடந்தது…?” என்று கேட்க, மிளிர்ம்ருதை அபயவிதுலனை ஏறிட்டாள். அவனோ அவளை எச்சரிப்பது போலப் பார்க்க, சற்று நேரம் அவனை வெறித்தாள் மிளிர்ம்ருதை.

“யெஸ் சார்…! இவர்தான் அடித்தார்…” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

அதைக் கேட்டதும், காவலதிகாரியும் குழப்பத்துடன் அபயவிதுலனைப் பார்க்க, மிளிர்ம்ருதையோ, அபயவிதுலனை வெறித்தவாறு,

“யெஸ் சார்…! இவர்தான் இங்கே இருந்தவர்களை அடித்தார்…” என்றாள் வன்மமாக. அதைக் கேட்டதும் அபயவிதுலனின் விழிகள் சுருங்கி நிமிர்ந்ததன்றி, வேறு எந்த மாற்றமும் அவனிடம் தெரியவில்லை. இப்போது சந்தேகமாக அபயவிதுலனைப் பார்க்க, அவனோ அதே பரிதாபத்துடன் தன் முகத்தை வைத்திருந்தவாறு,

“சார்…! அவர்கள் ஏதோ குழப்பத்தில் இருக்கிறார்கள் போல… நான் எப்படி சார் நான் இத்தனை பெயரையும் அடித்திருப்பேன்… அதுவும் கட்டிவைத்த நிலையில்… யோசியுங்கள் சார்” என்று அவன் கேட்க, இப்போது சந்தேகமாக மிளிர்ம்ருதையைப் பார்த்தார் காவலதிகாரி. தன் பல்லைக் கடித்தவள்,

“பின்னே என்ன சார்…! நானே பயந்து போயிருக்கிறேன்… என்னிடம் வந்து கேட்கிறீர்கள்… பார்த்தால் தெரியவில்லையா… அவரைத்தான் கதிரையோடு கட்டியிருக்கிறார்கள்… எப்படி இத்தனை பேரை அடித்திருப்பார்… யோசிக்க மாட்டீர்களா… இந்தாள்தான்… இந்தாளும் மகனுமாகத்தான் இவரை அடித்தார்கள்… இதோ… இவர்கள் தங்களுக்குள்ளேயே ஏதோ பிரச்சனைப் பட்டு அடித்துக் கொண்டார்கள்… எதற்காக அடிபட்டார்கள் என்று… எனக்குத் தெரியாது…” என்றாள் அபயவிதுலனிடமிருந்து தன் விழிகளை விலக்காதவாறு.

“நீங்கள் யார்…? எதற்காக… இங்கே வந்தீர்கள்…?” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்க, மிளிர்ம்ருதை தன் வாயை மூடிக்கொண்டாள். என்னவென்று பதில் சொல்வது…? அவன் மனைவி என்பதா? அதுதான் வேண்டாம் என்று விட்டுச் சென்றானே… அதற்குப் பிறகும் மனைவி என்று சொல்ல அவளுக்குப் பைத்தியமா என்ன? அவள் எரிச்சலுடன் தயங்க, அந்தத் தயக்கத்தைப் பல்லைக் கடித்தவாறு பார்த்துக்கொண்டிருந்த அபயவிதுலன்,

“அவர்கள் என் மனைவி சார்…!” என்றான் தன் முகத்தில் கோபத்தை வெளிக்காட்டாது இருக்கப் பெரு முயற்சி செய்தவாறு.

அந்தக் காவலதிகாரி, இவன் பக்கமாகத் திரும்ப முயல, உடனே இவன் முகம் சோகத்தை வரிந்தெடுத்துக் கொண்டது.

அதைக் கண்டதும் மீண்டும் தன் வாயைப் பிளந்தாள் மிளிர்ம்ருதை. இவன் மட்டும் நடிக்கப் போனால், அடுத்த ஆஸ்கார் விருது இவனுக்குத்தான் என்று அந்த நேரத்திலும் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

அபயவிதுலனை நோக்கித் திரும்பிய அதிகாரி, அவனிடம் எதையோ கேட்க முயலும்போதே, உள்ளே ஐ ஜி பி நுழைந்தார்.

அவரைக் கண்டதும் விஜயசிங்கவின் முகம் மலர்ந்தது.

“வாயா பான்டுகா… இவன் சொல்வதை நம்பாதே… என் மகனை இவன்தான் அடித்தான்… என்னை நம்பு…” என்று அவர் அழு குரலில் கூற,

“மிஸ்டர் விஜயசிங்க…! யு ஆர் அன்டர் அரஸ்ட்…” என்றவாறு அதிகம் பேசாமல் கைவிலங்கை நீட்டினார் அவர். அதிர்ந்துபோனார் தலைவர்.

“வட்… என்ன உளறுகிறாய்…” என்று சினத்துடன் கேட்க,

“சாரி சார்…! இனி செய்வதற்கு ஒன்றுமில்லை…” என்று உதட்டைப் பிதுக்கினார் பாண்டுகா. குழம்பிய தலைவர்,

“என்ன சொல்கிறாய்…” என்று அவரருகே வந்து கேட்க, தலைவரின் காதுக்கருகாமையில் குனிந்த பாண்டுக,

“ஆமாம் சார்…! பள்ளிக்கூட மாணவிகளுடன் தவறாக நடந்தது, நீங்கள் செய்த கூட்டுக் கொலை, எல்லாம் ஆதாரத்துடன் மேலிடத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கும் உங்களுக்குமிடையில் பங்களிப்பிருப்பது தெரிய வந்திருக்கிறது சார். யாரோ அதை ஐநா சபைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். எந்த நேரமும், ஐநா உங்களுக்கு எதிராக விசாரணைக் குழுவை அனுப்பும்… அதற்கு முதல் நாம் முந்தவேண்டும் சார்…!” என்றதும் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தார் தலைவர்.

“ஐநா சபை வரைக்குமா போயிருக்கிறது?” என்று வாயைப் பிளக்க,

“ஆமாம் சார்…! இதோ பாருங்கள்… இப்போதைக்கு உங்களுக்குப் பாதுகாப்புச் சிறைதான். பேசாமல் ஒரு மூன்று மாதம் உள்ளே இருங்கள்… அதன் பிறகு வெளியே வந்துவிடலாம்… அதற்குப் பிறகு… இவர்களைப் பார்த்துக்கொள்ளலாம்… ஒரு நண்பனா இதைத்தான் கூறமுடியும் விஜயசிங்க… கொஞ்ச நாள்தான்… அங்கே எல்லா வசதியும் உங்களுக்குக் கொடுக்கப்படும்… இந்தக் களோபரமெல்லாம் ஓய்ந்தபின், இவை பொய்யான சாட்சியங்கள் என்று எதாவது ஒன்றை உருவாக்கி வெளியே வந்துவிடலாம்… இன்னும் இருபது வருடங்களுக்குத் தீர்ப்பைக் கூற முடியாதவாறு ஐநாவின் வாயையும் அடைத்துவிடலாம்… உங்களிடமில்லாத பணமா…” என்று அவருக்கு மட்டும் கேட்குமாறு கூற, வாயை மூடிக்கொண்டு அபயவிதுலனை முறைத்துப் பார்த்தார் விஜயசிங்க.

அருகேயிருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த மிளிர்ம்தையால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. பணம் இருந்தால் அது பாதாளம் வரை பேசுகிறதே… எத்தனை அநியாயம் அக்கிரமத்தைச் செய்துவிட்டு… எத்தனை சுலபமாக அதிலிருந்து தப்பப் போகிறார்கள்… சே… இவர்களுக்குத் தண்டனை கொடுக்கப் போவது யார்… அபயவிதுலன் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று எண்ணினாளே… இதோ பெரிய பதவியில் இருப்பவன்… இவனும் இவன் மகனும் செய்ததற்கு என்ன பெயர் சூட்டுவது…’ நினைக்க நினைக்கத் தாளவில்லை அவளுக்கு.

ஆனால், ஒன்று மட்டும் புரிந்தது. அந்த விஜயசிங்கவும், அவனுடைய மகனும் நிச்சயமாக அதிக நாட்களுக்குச் சிறையில் இருக்கப்போவதில்லை என்று.

அவருடன் சேர்ந்து அபயவிதுலனையும் ஏறிட்டுப் பார்த்த ஐஜிபி பான்டுக, அவனை நெருங்கி என்ன நடந்தது என்று கேட்க, ஒன்றையும் விடாது அதாவது அப்போது என்ன சொன்னானோ அதையே அட்சரம் பிசகாமல் கூற,

“அப்படியானால் இவர்கள் அடித்தது யார்…” என்று சந்தேகத்துடன் கேட்க,

“எனக்கெப்படி சார் தெரியும். என்னைக் கட்டிப்போட்டிருந்தார்கள்… இதோ… இவர்தான் அவிழ்த்து விட்டார்… நான்… சும்மாதான் இருந்தேன். திடீர் என்று அவர்களுக்குள் ஏதோ சண்டை சார்…! மாறி மாறி அடிக்கத் தொடங்கிவிட்டார்கள்… ஏன் எதற்கு என்று அவர்களைக் கேட்டால்தான் தெரியும்…” என்று அவன் கூற, அவனுடைய தோளில் தட்டியவர்,

“பார்த்து தம்பி… எப்போதும் உனக்குச் சாதமாக இருக்கும் என்று எண்ணாதே…” என்று கூறிவிட்டு, காவலர்களைப் பார்த்து, தலையை அசைத்துவிட்டு வெளியேற, சற்று நேரத்தில் அனைவரும் ஜீப்பில் ஏற்றப்பட்டனர்.

பலமாகத் தாக்குப்பட்ட விக்ரமனும், இரண்டு அடியாட்களும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டனர்.

காவலதிகாரி, சாமின்ட அபயவிதுலனைப் பார்த்து, மருத்துவமனைக்கு வருமாறு அழைக்க இவன் மறுத்துவிட்டான்.

“ஐ ஆம் ஓக்கே சார்…! நீங்கள் புறப்படுங்கள்…” என்று கூற, சரிதான் என்று அவரும் வெளியேற அந்த அறையே மயான அமைதியானது.

What’s your Reaction?
+1
28
+1
1
+1
9
+1
7
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே!” அத்தியாயம் 21,22,23

    சேதி 21 *********                 சென்னையின், போக்குவரத்து…

13 hours ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-19

(19)   அடுத்து, மிளிர்மிருதையை மருத்துவ ஊர்தியில் ஏற்றிவிட்டு இவனும் ஏறி அமர, மறு கணம் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது…

15 hours ago

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த…

2 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-17/18

(17)   அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…

3 days ago

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே அத்தியாயம் 18,19,20

சேதி 18 *********                    நள்ளிரவை நெருங்கப் போகும்…

4 days ago

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே! “அத்தியாயம் 16&17

சேதி 16 *********               மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக…

6 days ago